Astrology பற்றி அறிந்தவை...(சுட்டதும்...தொகுத்ததும்..!)
காலச் சக்கரத்தை சிவபெருமானின் அம்சமாகிய பைரவர் இயக்கிவருகிறார். அப்படி இயக்குவதன்மூலமாக நவக்கிரகங்கள் தத்தம் கடமைகளைச் செய்து வருகின்றன.சந்திரன் சராசரியாக மூன்று நாட்களில் ஒரு ராசியையும்,சூரியன் ஒரு மாதத்திற்குள்(குறைந்த பட்சம் 28 நாட்கள்,அதிக பட்சம் 32 நாட்கள்) ஒரு ராசியையும் கடக்கின்றார்கள். இதே காலகட்டத்திற்குள் புதனும்(20 முதல் 30 நாட்களுக்குள்),சுக்கிரனும்(25 முதல் 35 நாட்களுக்குள்) ஒரு ராசியைக் கடக்கின்றார்கள்.45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் ஒரு ராசியைக் கடக்கிறார்;ஒரு வருடத்துக்கு ஒரு ராசியை குரு பகவான் கடக்கிறார்;ஒன்றரை வருடத்துக்கு ஒரு ராசியை ஒரே நேரத்தில் இராகுவும்,கேதுவும் எதிர்க்கடிகாரச் சுற்றில் கடக்கிறார்கள்;இரண்டரை ஆண்டுகளில்(30 மாதங்கள்=900 நாட்கள்)ஒரு ராசியை சனி கடக்கிறார்.
ஜாதக கட்டத்தில் ஒவ்வொரு கிரகங்களினதும் சொந்த (ஆட்சி) வீடுகளைப் பின்வருமாறு காட்டலாம்.
கிரகங்களின், உச்ச, மூலத்திரிகோண, மற்றும் நீச்ச வீடுகளைப் பற்றி கீழே...
சொந்த, உச்ச,மூலத் திரிகோண வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதையே செய்யும். நீச்ச வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதைச் செய்யாது. ஒரு கிரகம் எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அதற்கு 7-ம் வீட்டில் அவர் நீச்சம் பெறுகிறார். உதாரணமாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார். மேஷத்தில் இருந்து 7-ம் வீடான (மேஷத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்), துலாத்தில் அவர் நீச்சம் பெறுகிறார். சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெறுகிறார். ரிஷபத்தில் கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி 4- பாதங்கள், மிருகசீரிஷம் 1,2, பாதங்கள் இருக்கின்றன. சந்திரன் ரோகிணியில் மிகுந்த பலத்துடன் இருப்பார்.
கிரகங்கள் பார்வை என்றால் என்ன? எல்லாக் கிரகங்களும் தான் இருக்கும் வீட்டில் இருந்து 7-ம் வீட்டைப் பார்க்கும். உதாரணமாக சந்திரன் ரிஷபத்தில் இருக்கிறார். அவர் 7-ம் பார்வையாக விருச்சிகத்தைப் பார்ப்பார். ரிஷபத்திலிருந்து எண்ணுங்கள். ரிஷபம் 1,மிதுனம் 2, கடகம் 3,சிம்மம் 4, கன்னி 5, துலாம் 6, விருச்சிகம் 7. ஒருகிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டையும் சேர்த்து எண்ண வேண்டும்.
முதல்வீடு, 4-ம் வீடு, 7-ம் வீடு, 10-ம் வீடு ஆகியவை கேந்திரஸ்தானங்கள் (விஷ்ணு ஸ்தானங்கள்). 1, 5, 9 வீடுகள் திரிகோணஸ்தானங்கள் (லக்ஷ்மி ஸ்தானங்கள்). கேந்திரஸ்தானங்களும், திரிகோணஸ்தானங்களும் மிக நல்ல வீடுகளாக அழைக்கப்படுகின்றன. இங்கே நல்ல கிரகங்கள் தங்கி இருப்பார்களேயானால் அவைகள் நல்லவைகளையே செய்யும். கெட்ட கிரகங்கள் தங்கி இருந்தால் அவைகள் அந்த வீட்டைக் கெடுத்து விடுகின்றன. 3, 6, 8, 12 - மறைவுவீடுகள் - அதாவது , இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும். அதாவது இங்கே கெட்ட கிரகங்கள் தங்கி இருந்தாலும் பலம் இழந்து இருக்கும்- அதாவது நன்மையைச் செய்யும்.
சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன்,ராகு, கேது ஆகிய கிரகங்கள் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பார்கள். ஆனால் குரு, சனி,செவ்வாய் ஆகியகிரகங்களுக்கு 7-ம் பார்வையைத் தவிர வேறு சில பார்வைகளும் உண்டு.
செவ்வாய்:- தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7, 8-ம் வீடுகளைப் பார்ப்பார்.
குரு:- தான் இருக்கும் வீட்டிலிருந்து 5, 7, 9-ம் வீடுகளைப் பார்ப்பார்.
சனி:- தான் இருக்கும் வீட்டிலிருந்து 3-ம், 7-ம், 10-ம் வீடுகளைப் பார்ப்பார்.
இது போக - சூரியனுக்கு - 3 , 10 ஆம் பார்வைகளும் ; ராகு , கேது - 3 , 11 ஆம் பார்வைகளும், சுக்கிரனுக்கு - 4 , 8 - ஆம் பார்வைகளும் உண்டு. ஆனால் , இவை முக்கியத்துவம் பெறுவதில்லை.
பார்வை என்பது இரண்டு கிரகங்களுக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கும், ஒரு வீட்டிற்கும் உள்ள தூரம் தான்.
ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான் முதல் வீடு. அதுதான் லக்கினம் எனப்படும். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் லக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு. அவைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
முதல் வீடு: உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். இதை வைத்து ஜாதகருடைய உருவம், குணாதிசயங்கள், உடல் நலத்தைப் பற்றியும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் சொந்த ஊரில் வாழ்வாரா அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் அறியலாம்.
இரண்டாவது வீடு: இது குடும்பத்தையும், வரவு-செலவு- பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது. ஒருவர் கனிவாகப் பேசுவாரா, அல்லது கடினமாகப் பேசுவாரா, நன்றாகப் பேசுவாரா அல்லது திக்கிப் பேசுவாரா என்றும் கண்பார்வையையும் (ஒருவர் கண்ணாடி அணிபவரா இல்லையா) என்பதையும் அறியலாம்.
மூன்றாம் வீடு:இந்த வீட்டைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ,வெளியூர்ப் பயணம் ஆகியவற்றை கூறலாம்.
நான்காம் வீடு:இது தாயாரைக் குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு,தேர்வு, வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள்,பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் ஆகியவற்றையும் குறிக்கிறது,
5-ம் வீடு: போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா, குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா இல்லயா சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா ஆன்மீக வாழ்க்கையையும் வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.
6-ம் வீடு: கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை, ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான்.
7-ம் வீடு: திருமணத்தை, வியாபாரத்தை, மரணத்தை, பிரயாணத்தைக் குறிக்கும் வீடு இது தான்.
8-ம் வீடு: ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு. மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் துன்பம், தோல்வி, தண்டனை, தடைகள், இவைகளையும் அறியும் வீடு இதுதான்.
9-ம் வீடு: தகப்பனர், ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள்,ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான்.
10-ம் வீடு:ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் அரசியல் நல்லபடியாக இருக்குமா இருக்காதா என்றும் 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடு குறிக்கிறது.
11-வது வீடு: நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.
12-வது வீடு: நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் மறைமுக எதிரிகளையும் ஜெயில் வாசம், உள்ளதா இல்லையா என்பதையும் கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.
ஒன்பது கிரகங்களின் காரகத்துவங்களைப் பார்ப்போம்.
சூரியன் :இது ஒருவரின் தகப்பனாரைக் குறிக்கிறது. ஒருவரின் தகப்பனார் எவ்வாறு அமைவார்? அவர் நல்லவரா அல்லது கெட்டவரா ? இது போன்றவைகளைத் தெரிந்து கொள்ளலாம். பிதுர்காரகன். சூரியன் அரசியல் வாழ்க்கையைக் குறிப்பவர். உடல் உறுப்புக்களில் இதயம், வலது கண், வாய், தொண்டை, மூளை, ஆகியவற்றைக் குறிப்பார். தைரியம், நல்ல குணாதிசயங்கள், ஆகியவற்றைக் கொடுப்பார்.
சந்திரன் : இவர் தாயார் (மாதுர் காரகன்), மனது (மனோகாரகன்) ஆகியவற்றைக் குறிப்பார். இவர் ஒரு பெண்கிரகம். குளிர்ந்த கிரகம். இது அடிக்கடி மாறும் தன்மை உடையவர். இவரை நீர்க்கிரகம் என்பார். சந்திரன் வயிற்றையும் குறிப்பார். பெண்களுக்கு மார்பகங்களைக் குறிப்பவர் இவர்தான். சந்திரன் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பவர். இவர் கொடுக்கக் கூடிய வியாதிகள்: மனோவியாதிகள், ஜலதோஷம், சளி, ஆஸ்த்மா, போன்றவை.
செவ்வாய் : சகோதரர்களுக்குக் காரகம் வகிப்பவர் இவர்தான். அங்காரகன். இவர் ஒரு ஆண் கிரகம். முரட்டுத்தன்மை உடையவர். சண்டை,சாகசம், இவற்றிற்கெல்லாம் இவர்தான் அதிபதி. தைரியத்தைக் கொடுப்பவர். முரட்டுத்தனமான காரியங்களில் ஈடுபட வைப்பார். ஸ்திர சொத்துக்களான வீடு, வாசல், நிலம், ஆகியவற்றிற்கு அதிபதி இவர்தான். விபத்துக்களைக் கொடுப்பவரும் இவர் தான். காயம், தழும்புகள், இவற்றையெல்லாம் கொடுக்கக் கூடியவர் இவர்தான். கூர்மையான ஆயுதங்கள், கத்தி, துப்பாக்கி, ஆகியவைகளுக்கும் இவர்தான் காரகம் வகிக்கிறார்.
புதன் :இது ஒரு ஸ்திரத்தன்மையில்லாத, பெண் கிரகம். வித்யாகாரகன். எளிதாக மாறும் தன்மை கொண்டவர். உதாரணமாக கன்னியா லக்கினம், மிதுன லக்கினம் இவற்றிற்கெல்லாம் இவர் தான் லக்கினாதிபதி.
குரு :குழந்தைகளுக்கு அதிபதி-புத்திரகாரகன்-ஆண் கிரகம். சாத்வீக குணம் உள்ளவர். ஆசிரியர், சட்டம், பேங்குகள், பணம் புழங்குமிடம், ஆகியவற்றையும் இவர் குறிப்பார். கோவில்கள், மதங்கள், ஆன்மீகம் ஆகியவற்றையும் இவர் குறிப்பார்.
சுக்கிரன் :இது ஒரு பெண்கிரகம். இவர் ஒரு காதல் கிரகம். களத்திரகாரகன். இவர் வசீகரமான உருவத்தையும் அழகையும் கனிவான தன்மையும் கொடுப்பார். வாழ்க்கைத் துணைவரையோ அல்லது துணைவியையோ குறிப்பார். வாகனங்கள், அழகு திரவியங்கள், துணிமணிகள், கலைகள், நகைகள், வைரம், இவற்றிற்கெல்லாம் அதிபதி.
சனி : ஆயுள்காரகன் . எல்லோர் ஆயுளையும் நிர்மாணிப்பவர் இவரே. இவர் ஒரு குளிர்ந்த கிரகம். எதையும் தாமதப்படுத்தும் குணம் கொண்டவர். ஞாபகமறதியை அதிகம் கொடுப்பவர் அவர். இரும்பு, தலைமயிர், பூமிக்கு அடியில் இருக்கும் உலோகங்கள், தாதுப் பொருள்கள் இவற்றிற்கெல்லாம் அதிபதி சனி பகவானே.
ராகு, கேது :இவர்களுக்கு சொந்த வீடென்று எதுவும் கிடையாது. இவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டுப் பலனையே கொடுப்பார்கள். யாருடன் சேர்ந்து இருக்கிறார்களோ அவருடைய பலனையே கொடுப்பார்கள். யாரால் பார்க்கப்படுகின்றனரோ அவருடைய பலனையே கொடுப்பார்கள். ஜெயிலுக்குக் காரகத்துவம் வகிப்பது ராகு தான். இவர்கள் இரண்டு பேரும் பாப கிரகங்கள்.
ராகு...
லக்கினத்திலிருந்தால் : தழும்போ / மச்சமோ தலையில் காணப்படும். நற்குணங்கள் குறைந்து உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.
2-ம் வீட்டில் இருந்தால் பணத்தட்டுப் பாடு இருக்கும். சிலருக்கு மனைவி இரண்டு. ஏதாவது பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
3-ம் வீட்டில் இருந்தால் தைரியசாலியாக இருப்பார். இளைய சகோதரத்துடன் ஏதாவது பிரச்சனை இருக்கும்.
4-ம் வீட்டில் இருந்தால் தாயாருக்கு உகந்தது அல்ல: வீட்டு விவகாரங்களில் அதிக அக்கரை காட்ட மாட்டார்.
5-ம் வீட்டில் இருந்தால் இதை சர்ப்ப தோஷம் என்பார்கள். குழந்தைப் பேருக்கு இடைஞ்சல் உண்டாகும். பூர்வ புண்ணிய மற்றவர்.
6-ம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றி கொள்வர். தாய் மாமனுக்கு ஆகாது.
7-ம் வீட்டில் இருந்தால் சிலருக்கு மனைவியர் இரண்டு. மனைவி வியாதி உள்ளவளாக இருப்பாள்.
8-ம் வீட்டில் இருந்தால் எப்போதும் கவலையுடன் இருப்பார். கஷ்டங்கள் இருந்து வரும்.
9-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்கு ஆகாது. செய்யும் தருமங்களுக்குப் பெயர் இருக்காது. உயர் படிப்பில் தடை வரும்.
10-ம் வீட்டில் இருந்தால் தொழிலில் பல தொந்தரவு இருந்து வரும்.
11-ம் வீட்டில் இருந்தால் எத்தகைய குறையும் இல்லை. நல்லதே நடந்து வரும்.
12-ம் வீட்டில் இருந்தால் செலவுகள் இருந்து வரும். சிலருக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்.
கேது (மோட்சக்காரகன்)
1-ம் வீடு முகத்தில் மச்சம் அல்லது வடு உண்டாகும். நல்ல கிரகங்களின் சேர்க்கை இருந்தால் நன்மை உண்டாகும்.
2-ம் வீடு அவர் நாக்கே அவருக்கு எதிரி. எப்போதும் கவலைகள் இருக்கும். சிலருக்கு இரண்டு மனைவிகள்.
3-ம் வீடு தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருக்க மாட்டார். நவீன நாரதர் என்று கூறலாம். இளைய சகோதரத்துடன் பிணக்கு.
4-ம் வீடு நல்ல கிரகங்கங்கள் சேர்க்கை இருந்தால் 4-ம் வீடு குறிக்கின்ற ஆதிபத்தியங்கள் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் நன்மை இல்லை.
5-ம் வீடு இஷ்ட தெய்வம் வினாயகர். புத்திர தோஷம் உண்டு. நல்லவர் சேர்க்கையோ பார்வையோ இருந்தால் நல்லது செய்வர்.
6-ம் வீடு:-எதிரிகளை வெற்றி கொள்வர். போட்டிகளில் வெற்றி பெறுவர். எல்லோர் நடுவிலும் பெயர் பெற்று இருப்பர்.
7-ம் வீடு சிலருக்கு 2 மனைவிகள். நல்ல கிரக சேர்க்கை இருப்பின் ஒரு மனைவி.சோம்பேறி, கெட்ட கிரக சேர்க்கை= மனைவியால் துன்பம்.
8-ம் வீடு துன்பங்கள் தொடரும். வியாதிகள் வரக்கூடும். சிலருக்குப் பெண்கள் சம்மந்தமான நோய் வரக்கூடும்.
9-ம் வீடு தகப்பனாருடன் நல்ல உறவு இருக்காது. தற்புகழ்ச்சி உள்ளவர். தெய்வ நம்பிக்கை குறைந்தவர். சுறுசுறுப்புக் குறைந்தவர்.
10-ம் வீடு நண்பர்கள், சொந்தக்காரர்கள் நடுவில் பெயருடனும் புகழுடனும் இருப்பர். நம்பிக்கைக்குறிய வேலைக்காரர்கள் இருப்பார்.
11-ம் வீடு பணப்புழக்கம் உள்ளவர். பணச்சேமிப்பு இருக்கும். சாகசக் காரியங்களில் ஈடுபடுவர்.
12-ம் வீடு பாப காரியங்களில் ஈடுபடுபவர். பிதுரார்ஜித சொத்துக்கள் போய்விடும். கண்பார்வையில் கோளாறு , பெயர் புகழை இழப்பர்.
முதல் வீடான லக்கினத்தைப் பார்ப்போம். முதல் வீட்டின் பலனை அதன் அதிபதியை வைத்தும், அதில் இருக்கும் கிரகங்களை வைத்தும், அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் பலன் கூற வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி 12 வீடுகளிலும் இருந்தால் என்ன பலன்..?
லக்கினாதிபதி லக்கினத்தில் இருந்தால் அவர் ஆட்சியில் இருக்கிறார் எனப் பொருள். நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர்.
2-ம் வீட்டில் இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும் இருப்பர்.
சுய சம்பாத்தியம் உள்ளவர். குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர். 3-ம் வீட்டில் இருந்தால் சகோதர, சகோதரிகளுடன் கூடி வாழ்பவனாகவும், நல்ல தைரியசாலியாகவும் இருப்பர்.
3-ம் வீடு இளைய சகோதரத்தையும், தைரியத்தையும் சிறிய பயணத்தையும் குறிக்கிறது. அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ளுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பர்.
4-ம் வீட்டில் இருந்தால் தாயிடம் மிக்க அன்பு உள்ளவராகவும், குடும்பத்தில் ஈடுபாடு உள்ளவராகவும், பந்துக்களின் ஆதரவைப் பெற்றவராகவும் இருப்பான். கல்வியில் சிறந்து விளங்குபவராகவும், தாய் வழி மாமன்கள் ஆதரவைப் பெற்றவராகவும், சொத்துக்கள் இருப்பவராகவும் இருப்பர்.
5-ம் வீட்டில் லக்கினாதிபதி இருந்தால் புத்திர சந்தானங்களைப் பெற்றவராகவும் அவர்களால் சாந்தோஷத்தையும், ஆதரவையும் பெற்றவராகவும் இருப்பார். தெய்வீக வழிபாடுகள் நிறைந்தவராகவும், மகான்களின் சத்சங்கத்துடனும நல்ல சிந்தனை உடையவராகவும் இருப்பார்.
6-ம் வீடு மறைவு ஸ்தானம் என்றும் துஸ்தானம் என்றும் அழைக்கப் படும். இந்த வீட்டில் லக்கினதிபதி இருப்பது நல்லதல்ல. இருந்தால் ஜாதகன் வியாதி உடையவனாக இருப்பார். அவருக்கு விரோதிகள், சத்துருக்கள், அவதூறு பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள். கடனுபாதைகள் நிறைந்தவரும், மனம் அமைதியற்றவனாகவும் இருப்பான்.
7-ம் வீட்டில் லக்கினாதிபதி இருந்தால் ஸ்திரீலோலனாகவும், ஆசைகள் உடையனவராகவும் இருப்பார். பொறுப்பை ஏற்காமல் வெளியில் சுற்றுபவனாகவும் இருப்பார்.
8-ம் இடம் மறைவு ஸ்தானம். லக்கினாதிபதி 8-ல் இருந்தால் ஆயுள் நிறைந்தவராக இருப்பார். ஆனால் சிரமத்துடன் குடுப்பத்தை நடத்துவராக இருப்பார். வறுமையுடனும் குடும்பத்தை நடத்துபவராக இருப்பார். சிலர் உடலில் தேவையான ஊட்டமைன்றி இருப்பர். பொதுவாக 8-ல் லக்கினாதிபதி இருப்பது விரும்பத்தக்கது அல்ல;
9-ம் இடத்தில் லக்கினாதிபதி இருந்தால் தகப்பனாரின் அன்பையும், ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் பெற்றவராக இருப்பார். அதேபோல் பித்துருக்களின் அன்பைப் பெற்றவருமாய் இருப்பார். சத்தியத்துடன் நேர்வழியில் நடப்பவராகவும், தருமத்தைச் செய்பவராகவும், தெய்வவழிபாடும் நிறைந்தவராகவும் இருப்பார்.
10-ம் இடத்தில் லக்கினாதிபதி இருப்பது மிக நல்லது. குடும்பப் பொறுப்பை அறிந்து நடப்பவராகவும், ஜீவன் பலம் உடையவராகவும் தெய்வபக்தி உள்ளவராகவும், புண்ணிய காரியத்தில் பற்றுள்ளவராகவும் நற்பெயறும் கீர்த்தியும் உள்ளவராகவும் இருப்பார். அரசாங்கத்தில் நற்பெயரும், செல்வாக்கும் அதிகாரமும் உயர்பதவிகளும் உள்ளவர். பந்துக்களிடமும் உற்றார் உறவினரிடம் பெயர் பெற்றவராகவும் இருப்பார்.
11-ம் வீட்டில் இருந்தால் லாபமான தொழிலைச் செய்பவராகவும் நீண்ட ஆயுளை உடையவராகவும் இருப்பார். மூத்த சகோதரர்களின் ஆதரவு நிறைந்து இருக்கும். வாழ்க்கையில் இவர் ஓர் நல்ல நிலைக்கு வருவார்.
12-ம் வீட்டில் இருந்தால் எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகம் இருக்கும். சிலர் அடிக்கடி இடமாற்றம்-அலைச்சல் அதிகம். சோம்பேரி எனவும் திறமையற்றவர் எனவும் மற்றவர்களால் அழைக்கப்படுவர். சமயத்தில் அவப்பெயரும், நிந்தனைகளும் வரும்.
லக்கினாதிபதி எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கிறது. லக்கினாதிபதி 6, 8, 12-ம் வீட்டைத்தவிர மற்ற வீடுகளில் இருந்தால் சுபப் பலனைத் தருகிறார்.
கிரகங்கள் நமது உடலில் சிலவற்றை குறிக்கின்றனர்.
ஏழு கிரகங்களும் மேற்கூறியவற்றிற்குக் காரகம் வகிக்கின்றன. இவைகள் எல்லாம் பலன் சொல்லப் பயன் படும். ஒரு கிரகம் வலுத்து இருந்தால் அந்த காரகத்துவம் நன்றாக இருக்கிறது எனப் பொருள். உதாரணமாக குரு வலுத்து இருந்தால் அவன் நல்ல குணங்களைப் பெற்றவனாகவும், பணவசதியுள்ளவனாகவும், குழந்தைப் பேரு உள்ளவனாகவும் இருப்பான் எனக் கொள்ளலாம். அதேபோல் புதன் வலுத்திருந்தால் அவன் கெட்டிக்காரனாகவும், பேச்சுவன்மை உள்ளவனாகவும் இருப்பான். ஆனால் சனி வலுத்து இருந்தால் துன்பங்கள் குறைந்து இருக்கும். சனி வலுவிழந்தால் துன்பங்கள் அதிகரிக்கும்.
லக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவை ஒருவரின் ஆயுளைக் குறிக்கிறது. ஒருவரின் ஆயுளைக் கணிக்க இந்த மூன்று வீடுகளையும் ஆராய வேண்டும். ஒருவரின் ஆயுள் 30 வயதுக்குள் இருந்தால் அது அற்பாயுள் எனப்படும். 30முதல் 60 வயது முடிய நடுத்தர ஆயுள் எனப்படும். 60 வயதுக்குமேல் அது தீர்க்காயுள் எனப்படும். ஒருவரின் ஆயுளை எப்படித் தீர்மானிப்பது? இது மிகவும் கடினமான வேலை. ஜோதிடத்திலேயே மிகவும் கடினமானது இதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் தீர்க்க ஆயுளைக் காட்டுகின்றன.
• லக்கினதிபதி தன் சொந்த வீட்டிலோ, அல்லது உச்ச வீட்டிலோ இருத்தல்.• 8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருத்தல்.
• லக்கினமும், சந்திரனும் நல்லவர்கள் சேர்க்கை பெற்றிருத்தல்.
• லக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருத்தல்.
• லக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்
• எட்டாம் வீட்டிற்கதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது லக்கினத்திலோ இருத்தல் அல்லது லக்கினத்தையோ or 8-ம் வீட்டையோ பார்த்தல்
• சந்திரனும், லக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருத்தல்.
• குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்.
இதைப் போல் பல கிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் கூறிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை மட்டும் நாம் கூறியுள்ளோம். நமது வாசகர்கள் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களைப் பார்த்தால் ஆயுளைப் பற்றி விரிவாகக் கூறி இருப்பது தெரிய வரும்.
கீழே கூறியுள்ளவைகள் அற்ப ஆயுளைக் காட்டுகின்றன.
1. 8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும், 6, 12 வீடுகளில்
• செவ்வாயும், சனியும் இருத்தல்.
• லக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்
• லக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபபார்வை இல்லாது இருந்தாலும், 6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபபார்வை இல்லாதிருப்பதும்,
• பொதுவாக லக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள் இருந்து சுபர் பார்வை இல்லாதிருத்தல்.
ராசிகளில் மேஷம், கடகம், துலாம் ,மகரம்- ஆகியவை சரராசிகள் எனப்படும். இந்த சரரசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும். மேஷத்திற்குப் 11-ம் வீடு கும்பம்: அதன் அதிபதி சனி; ஆகவே மேஷத்திற்கு சனி பாதகாதிபதியாகிறார். இதேபோன்று கடகத்திற்கு சுக்கிரன், துலாத்திற்கு சூரியன், மகரத்திற்கு செவ்வாய் ஆகியோர் பாதகாதிபதியாகிறார்கள். பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மட்டும் மரணத்தைக் கொடுப்பார்கள். மற்ற காலங்களில் அவர்கள் வேறெந்தக் கெடுதலையும் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்குத் துலா ராசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் அதிபதி சூரியன். இவர் 10 வீட்டில் இருந்தால். 10-ம் வீடு ஜீவனஸ்தானம் அல்லவா! லாபாதிபதியான சூரியன் 10-ம் வீட்டில் இருந்தால் நல்ல வேலை கிட்டும். சிலருக்கு அரசங்க உத்தியோகம் கிட்டும். சூரியன் அரசாங்கத்திற்குக் காரகம் வகிப்பவர். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் எல்லாம் பெற்று நல்லவிதமாக வாழ்க்கை நடத்துவர். சூரியன் லாபாதிபதியாகி ஜீவனத்தில் அனர்ந்து அனைத்து நன்மைகளையும் செய்வார். அவருக்கு ஆயுள் 65 முடிய எனக்கொள்ளுங்கள். அப்போது சூரியதசையோ, அல்லது சூரியபுக்தியோ வருமாகில் அவர் அப்போது மாரகத்தைக் கொடுப்பார். அப்போது அவர் லாபாதிபதியாகச் செயல்படமாட்டார். பாதகாதிபதியாகச் செயல் படுவார். உத்தியோகத்தில் அவ்வளவு நன்மைகளைச் செய்த சூரியன் மாரகம் வரும் போது மரணத்தைக் கொடுக்கவும் தயங்குவதில்லை. தன் கடமையைத் தவறாமல் செய்வார்.
ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம் வீட்டிற் கதிபதிகளான முறையே சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் பாதகாதிபதி ஆகின்றனர்.இவர்கள் ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார்கள். ரிஷபத்திற்கு சனியோககாரகன் எனப் பெயர். அவர் தன் தசாபுக்தி காலங்களில் நன்மையைத்தான் செய்வார். இருப்பினும் ஆயுள்முடியும் போது அவர் தன் கடமையைச் செய்யாமலிருப்பதில்லை. அவர் மரணத்தைக் கொடுப்பார். ஆயுள் இருக்கும்போது நல்லவைகளையும், ஆயுள் முடியம்போது மாரகத்தையும் கொடுப்பார்.
உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார். மிதுனத்திற்கு 7-ம் வீட்டின் அதிபதி குரு, கன்னிக்கு 7-ம் வீடான மீனத்திற்கதிபதி குரு பாதகாதிபதியாகிறார். தனுசுவிற்கும், மீனத்திற்கும் புதன் 7-ம் வீட்டிற்கதிபதியாகி அவர் பாதகாதிபதியாகிறார். இளமையில் திருமணத்தைக் கொடுத்த குருவும், புதனும் ஆயுள் முடியும்போது ஆயுளை முடித்துவைக்கவும் செய்வார்கள்.
லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்துடன் சேர்ந்து இருக்கலாம். நல்லத்தையே செய்யும். லக்கினாதிபதி ஒரு பாபகிரகத்துடன் சேர்ந்து இருந்து, லக்கினத்தில் ராகு இருப்பாரேயாகில் அவருக்கு தாழ்மை உணர்வு இருக்கும். சூரியன்,சனி, செவ்வாய் ஆகியவை வரண்ட கிரகங்களாகும். இவை ஒருவரின் லக்கினத்திலே இருப்பாரேயாகில் அவர் சற்று ஒல்லியான உருவம் கொண்டவராக இருப்பர். ஒருவரின் லக்கினம் சரராசியாக இருந்து, அதன் அதிபர் சர ராசியில் இருந்தால் அவர் அதிகம் வெளியூர்ப்பயணம் செய்து பணம் சம்பாதிப்பார் எனக் கொள்ளலாம். லக்னம் சரராசியாகி, நவாம்ச லக்கினமும் சர ராசியாகி, நவாம்சத்தில் லக்கினாதிபதி சர லக்கினத்தில் இருப்பாரே யாகில் அவரும் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டு ஜீவனம் செய்வார் எனக் கொள்ளலாம். ஒருவருக்கு லக்கினத்தில் பல பாப கிரகங்கள் இருப்பாரேயாகில் அவர் வாழ்க்கையில் பல துக்ககரமான சம்பவங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். லக்கினத்திற்கு இருபுறமும் ராகுவும், சனியும் அதாவது 12, 2 ஸ்தானங்களில் இருப்பார்களேயாகில் அவர்களுக்கு திருட்டு பயம் இருக்கும். அதேபோல் ராகுவும், செவ்வாயும் அல்லது சனியும் செவ்வாயும் லக்கினத்திற்கு 2, 12 வீடுகளில் இருந்தால் திருட்டு பயம் இருக்கும்.
ஒருவரின் உருவ அமைப்பைப் பற்றிப் பார்க்கும்போது சூரியன் லக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பைக் கொடுப்பார். சந்திரன் இருந்தால் உடல் அமைப்பு நல்ல விகிதத்தில் இருக்கும். சிலரைப் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கு கை, அல்லது கால் நீண்டு இருக்கும். அல்லது முகம் மட்டும் நீண்டு இருக்கும். செவ்வாய் இருந்தால் நல்ல ஆரோக்கியமான, உறுதியான உஷ்ணப் பாங்கான உடல் அமைப்பைக் கொடுப்பார். புதனும் லக்கினத்தில் இருந்தால் நல்ல உறுவமைப்பைக் கொடுப்பார். குரு இருப்பாரேயாகில் நல்ல மதிப்பை உண்டாக்கும் வகையில் உறுவ அமைப்பைக் கொடுப்பார். சுக்கிரன் இருப்பாரேயாகில் கவர்ச்சிகரமான உறுவ அமைப்பைக் கொடுப்பார். ஆனால் அந்த உறுவமைப்பில் பெண்மை கலந்து இருக்கும். சனி இருப்பாரேயாகில் நல்ல கறுமையான கூந்தலைக் கொடுப்பார். குருகிய மார்பு அமைப்புடன் சிறிது சோம்பேறித்தனமாக இருப்பார்.
ஒருவரின் மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சந்திரனின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரன்தான் மனதுக்குக் காரகம் வகிப்பவர். சந்திரன் சுபகிரகங்களான புதன், குரு, சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கலாம். புதனுடன் சேர்ந்து இருந்தால் நியாய உணர்வுடன் இருப்பர். நியாயத்தைப் பேசுபராக இருப்பர். புதன் அடிக்கடி மாறும் குணமுள்ளவரதலால் சந்திரனுடன் சேரும்போது இவர் தன் எண்ணங்களை மாற்றக் கூடியவராக இருப்பர். சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் எப்போதும் கவலை கொண்டவராக இருப்பார். செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் பெண்களாக இருப்பின் மாதவிலக்கு சம்மந்தமான பிரச்சனை இருக்கும். அவர்கள் மன உறுதியுடனும் தைரியத்துடனும் இருப்பர். சந்திரனும், ராகுவும் சேர்ந்து இருந்தால் அதுவும் லக்கினத்தில் இருந்தால் Hysteria என்னும் மன நோய் இருக்கும். சந்திரனும் குருவும் சேர்ந்து இருந்தால் நல்ல எண்ணங்களோடு மன உறுதியுடன் இருப்பர். பொதுவாக சந்திரனும் ராகுவும், சனியுமோ அல்லது செவ்வாயுமோ இருக்குமேயாகில் அவர்கள் நிச்சயமாக ஒரு emotional Character ஆக இருப்பர். பாப கிரகங்கள் சந்திரனுடன் சேராமல் இருப்பது நல்லது. சந்திரனும் சூரியனும் சேர்ந்து இருந்தால் மிகவும் வலுவான மனதைக் கொண்டவராக இருப்பார். அதே சமயம் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராகவும் இருப்பார். அம்மாவாசை அன்றுதான் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும். அப்போது பிறந்தவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பர்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ லக்கினத்தில் இருக்குமேயாகில் அவர்களுக்கு நரம்பு சம்மந்தமான தொந்தரவுகளிருக்கும்.
சூரியனோ அல்லது லக்கினமோ வர்க்கோத்தமத்தில் இருந்தால் முதல் வீடு பலம் பொருந்தியதாகக் கருதப் படும். வர்க்கோத்தமம் என்றால் என்ன? வர்க்கோத்தமம் என்பது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரு கிரகமோ அல்லது வீடோ ஒரே இடத்தில் இருப்பது. ஒருவருக்கு சூரியன் ராசியில் மேஷத்தில் இருக்கிறார் எனக் கொள்வோம். நவாம்சத்திலும் மேஷத்தில் சூரியன் இருப்பாரேயாகில் அது வர்க்கோத்தமம் எனப்படும். அதாவது சூரியன் ராசியிலும், நவாம்சத்திலும் மேஷத்தில் இருக்கிறார். இது சூரியனுக்கு மட்டுமல்ல எந்த கிரகமாக இருந்தாலும் ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அது வர்கோத்தமம் எனப்படும். லக்கினம் வர்கோத்தமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று கூறலாம். சூரியன் வர்கோத்தமத்தில் இருந்தால் அவர் உடல் வலு உள்ளவராகக் கருதலாம்.
இரண்டாம் வீட்டை அதன் அதிபதியைக் கொண்டும், அதில் இருக்கும் கிரகங்களை வைத்தும், அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் பலன் கூறவேண்டும். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. குடும்பத்தில் அமைதி இருக்குமா /குழப்பம் இருக்குமா என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். ஆகவே இதை குடும்பஸ்தானம் என்று நாம் குறிப்பிடுகிறோம். ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது எனக் கொள்வோம். அதாவது அந்த வீட்டில் ஒரு நபர் கூடி இருக்கிறார் என்றுதானே இதற்குப் பொருள். அதனால்தான் குழந்தை பிறப்பை இந்த வீட்டை வைத்துக் கூறுகிறோம். அடுத்ததாக இதை தனஸ்தானம் என்று கூறுவார்கள். அதாவது ஒருவருக்குப் பணவரவு நன்றாக இருக்குமா அல்லது சொற்பமாக இருக்குமா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் கண்பார்வை நன்றக இருக்குமா அல்லது பார்வையில் கோளாறு இருக்குமா என்பதையும் இந்த வீட்டையும் வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வாக்கு வன்மையையும் இதை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவர் சிரிக்கச், சிரிக்கப் பேசுவர். ஒருவர் எப்போதுமே ஒருவரையும் மதியாமல் பேசுவர். சிலர் திக்கித்திக்கிப் பேசுவர். ஆக ஒருவரின் நாக்கு வன்மையை இதைவைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வங்கியில் உள்ள பணம், கையிருப்புப் பணம், நகைகள், Investments ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவருக்குக் கல்யாணம் ஆகவில்லையா? ஏன் என்பதையும் நாம் இந்த இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஆராய வேண்டும். இளைய சகோதரத்தின் மரணம், இளைய சகோதரத்தின் வீண் செலவுகள் ஆகியவற்றையும் கூறலாம். எப்படி? 3-ம் வீடு இளைய சகோதரத்தைக் குறிக்கிறது. 3-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 2-ம் வீடு அல்லவா? 2-ம் வீடானது இளைய சகோதரத்தின் மரணம், வீண் செலவுகள், ஆகியவற்றையும் இந்த வீடு குறிக்கிறது.
4-ம் வீடு தாயாரைக் குறிக்கிறது. 4ம் வீட்டிற்குப் 11-ம் வீடு 2-ம் வீடு அல்லவா? ஆக தாயாரின் லாபங்களையும் இது குறிக்கிற்து. ஒருவரின் 7-ம் வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்கு 8-ம் வீடு 2-ம் வீடல்லவா? ஒருவருக்குக் கன்னியா லக்கினம் எனக் கொள்ளுங்கள். இவருக்கு 7-ம் வீடு மீனம். இது இவருடைய மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்கு 8-ம் வீடு எது? துலாம் அல்லவா? இந்த 8-ம் வீட்டில் குரு இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். அதாவது ஜாதகரின் தனஸ்தானத்தில் குரு இருக்கிறார். குரு எதையும் குறைவில்லாமல் கொடுப்பவர். ஆக இவருக்குப் பணம் குறைவில்லாமல் இருக்கும் எனக் கொள்ளலாம். இவருக்குக் குழந்தை பாக்கியமும் குறைவில்லாமல் இருக்கும் எனவும் கொள்ளலாம். இவரின் மனைவிக்கு இது 8-ம் இடம் என்றும் கூறினோமல்லவா? 8-ம் இடம் என்ன? ஆயுள் ஸ்தானம். ஆக இந்த 8-ம் இடத்தில் குரு இருப்பதால் இவரின் மனைவிக்கு நீண்ட ஆயுள் இருக்குமெனக் கூறலாம். இவ்வாறாக ஒரு வீட்டை வைத்து ஜாதகர் மட்டுமில்லாது மற்றவரின் பலன்களையும் கூறமுடியும். 2-ம் வீட்டை வைத்து ஒருவரின் மூத்த சகோதரத்தின் வீடு, வாசல் ஆகியவற்றைக் கூறமுடியும். மூத்த சகோதரத்தைக் குறிப்பது 11-ம் வீடு. 11-ம் வீட்டிற்கு 4-ம் வீடு ஜாதகரின் 2-ம் வீடல்லவா? ஆக 2-ம் வீட்டை வைத்து ஜாதகரின் ஸ்திரசொத்துக்கள், கல்வி ஆகியவற்றையும் கூறமுடியும்.
சூரியன்: லக்னத்திற்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் சூரியன் நின்றால் அந்த ஜாதகனின் வீடு தெய்வத்தால் காக்கப்படும். நல்ல வாகன யோகமும் சத் விஷயங்களில் ஞானமும் அறிவு கூர்மையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதரவும் புதல்வர்களுக்கு யோகமும் ஏற்படும். அஞ்சா நெஞ்சனாக பகைவர்களை ஒழித்து வீரனாக விளங்குவான். அதே சமயத்தில் 2, 3, 4, 5, 7 ஆகிய இடங்களில் சூரியன் நின்றால் அந்த ஜாதகன் சொற்ப அளவே பலன் பெறுவான். மேலும் வியாதி, கண்ணோய் முதலியன உண்டாகும். ஈனத் தொழில் செய்பவர்களின் விரோதமும் ஏற்படும்.
சந்திரன்: 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலும் 5, 9 எனும் திரிகோண ஸ்தானங்களிலும் தன ஸ்தானமான 2ம் இடத்திலும் லாப ஸ்தானமான 11ம் இடத்திலும் நிற்பாரேயாகில் நிறைந்த வருமானமும் நல்ல வீடும் விளை நிலமும் பசு மாடுகளும் சேர்ந்து வளமான வாழ்க்கை அமையும். மிகவும் சுகமும் சொந்த நாட்டிலும் பிற நாட்டிலும் அரசாங்க ஆதாயம் அதிகம் உண்டாகும். அதே சமயத்தில் பாவக் கிரகங்களின் பார்வை சந்திரனுக்கு இல்லாமல் இருப்பது முக்கியம். வெற்றி கொள்ளும் சந்திரன் 3, 5, 7, 11 ஆகிய இடங்களில் தனித்து நிற்க அத்தகைய ஜாதகன் பெரும் செல்வம் படைத்தவன். மந்திரங்கள் அறிந்து முறைப்படி பிரயோகித்து வெற்றி காண்பான். வாக்குவாதம் செய்வதில் வல்லவன். மருத்துவம் படித்து அத்துறையில் சிறந்து விளங்குவான். நல்ல வருமானம் பெற்று அவன் குடும்பம் விருத்தி அடையும். பகைவர்கள் அழிவார்கள்.
குரு: 4, 7, 10, 1, 5, 9 மற்றும் 2, 11 ஆகிய இடங்களில் இருந்தால் பிரபலமான யோகங்கள் உண்டாகும். லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும். பொன், பொருள் அதிகம் சேரும். மேலும் 2ம் இடத்தின் அதிபதி குருவைப் பார்க்க இவன் கீழ் பலர் வேலை செய்ய பல குடும்பங்களை ஆதரிப்பான். குரு 8ம் இடத்தில் நின்றால் மனைவியிடம் பகை கொண்டவனாகவும் விரோதிகளால் கண்டம் அடைபவனாகவும் இருப்பான். பொருள் விரயம் ஆகும். பல வகைகளில் அவமானம் வந்து சேரும். 6ம் இடத்தில் குரு இருந்தால் அரசாங்க வகைகளில் பகை உண்டாகும். வியாதியால் துன்பம் ஏற்படும். 12ல் குரு நின்றால் பண விரயங்கள் உண்டாகும். இருப்பினும் அந்த வீடு குருவின் ஆட்சி வீடாக இருந்தால் எந்த துன்பமும் அண்டாது.
சுக்கிரன்: சுக்கிரன் ஜாதகனின் கேந்திர கோண ஸ்தானங்களில் நிற்க மிகவும் நல்ல பலன்களைத் தருவார். பாவக்கிரகங்கள் சுக்கிரனைப் பார்த்த போதிலும் கவலை அடையவேண்டாம். அவன் பங்களா போன்ற சொத்துக்களும் பொன், முத்து ஆபரணங்களும் பெற்று சுகம் அடைவான். சுக்கிரன் 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் பலமுடன் இருந்தால் அந்த ஜாதகனுக்கு ஆயுள் குறைவு ஏற்படும். மேலும் வியாதி, வாத நோய் இவை உண்டாகும். வீடு, பொன், பொருள் நஷ்டம் ஏற்படும். அதே சமயத்தில் சுக்கிரன் 12ல் இருந்து அது ஆட்சி வீடானால் இறைவன் அருளால் நல்ல யோகமும் சயன சுகமும் உண்டாகும், இது திண்ணம். சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4ல் இருந்தால் யோகங்கள் அதிகம் உண்டாகும். வாகனங்கள் சேரும். பூமி லாபம் பெறுவான். சுக போகங்களை அனுபவிப்பான். அதே சமயத்தில் பாவக்கிரகமான சனி 10ம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பிரபல யோகம் உண்டாகும்.
சனி: சனி பகவான் 3, 6, 9, 11 ஆகிய இடங்களில் நிற்க ஆயுள் தீர்க்கம் உண்டாகும். நிறைய பொருள் சேரும். சனி 9ல் இருக்க பிதுர் தோஷம் உண்டு. விரோதிகளை வெற்றி காண்பான். அரசு மூலம் லாபம் அடைந்து பேரும் புகழும் விளங்க வாழ்வான். அதிக லாபம் உண்டாகும். சனி 10ல் இருந்தாலும் நற்பலன்களையே தருவான். வாகன யோகம் உண்டாகும். செய்யும் தொழிலில் முன்னேறி புகழ் அடைவான். சனி பகவான் 11ல் இருக்க தேவகுருவான குரு பகவான் 7ம் இடத்திலும் ராகு 4ம் இடத்திலும் செவ்வாய், சூரியன் இவர்கள் 3ம் இடத்திலும் நிற்க சனி ஜாதகனுக்கு சில தொல்லைகள் கொடுத்தாலும் ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.
செவ்வாய்: செவ்வாய் 1, 2, 6, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு நல்ல பூமி வாய்த்தலும் பெரும் பொருள் சேர்க்கையும் நல்ல விளை நிலமும் பொன் ஆபரணமும் கிட்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகி பல குடும்பங்களை காக்கும் திறமை பெற்று பகைவர்களை வெற்றி கொள்ளும் வீரனாவான் என அறிக. செவ்வாய் 3, 6, 7, 8, 9, 12 ஆகிய இடங்களில் நின்றால் இருக்கும் நிலமும் பொருளும் விரயமாகும். குடும்பத்தில் பிரிவு உண்டாகும். திருமணம் முதலிய சுப காரியங்கள் தள்ளிப் போகும்.
குருவின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய ஸ்தானங்களில் குருவுடன் சூரியன் மற்றும் ராகு அல்லது கேது நிற்க அந்த ஜாதகனுக்கு தோஷம் எதுவும் ஏற்படாது. லக்னாதிபதி ஆட்சி மற்றும் உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் பாவக்கிரகங்கள் பார்வை பெற்றால் பலவகைகளிலும் துன்பங்கள் ஏற்படும்.திசா நாதனும், அந்த திசையில் வரும் புத்தி நாதனும் சேர்ந்துதான் பலனைத்தருவார்கள். அதிலும் புத்தி நாதனின் கை ஓங்கி நிற்கும்.குரு திசையில் சனி புக்தி என்றால், சனியின் கைதான் ஓங்கி நிற்கும். ராகு திசை சுக்கிர புக்தி என்றால் சுக்கிரனின் கைதான் வலுக்கும்!
ஜென்ம குரு :ராசிக்குள்ளேயே குரு வந்து உட்காருவதுதான் ஜென்ம குரு என்பதாகும். இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.
இந்த ஜென்ம குரு நடக்கும் காலத்தில் புத்தி தடுமாற்றம், பாதை மாறிப் போதல் போன்றவை ஏற்படும்.மாறுபட்ட சிந்தனை, தீய எண்ணம் ஏற்படும். எனவே ஜென்ம குரு நடக்கும் காலக்கட்டத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராமன் - சீதையும் கூட அந்த நேரத்தில்தான் பிரிந்திருந்தனர். எனவே அந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஜென்ம குரு நடக்கும்போது புத்தி வேலை செய்யாது, மெளன விரதம் இருங்கள். உணர்ச்சிகள் வேலை செய்யும். தாழ்வு மனப்பான்மை வரும். பழையவற்றை நினைத்துப் பார்த்து சண்டைப் போடுவார்கள்.
ராகு திசை 7வது இடத்தில் வந்தால் மரணத்தை அல்லது மரணத்திற்கு ஈடான ஒரு இழப்பைக் கொடுக்கும்.
ராசிகளோடு நட்பு நிலை பாராட்டும் கிரகங்கள்.
சூரியன் - விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.
சந்திரன் - எல்லா வீடுகளுமே நட்பு.
செவ்வாய் - சிம்மம், தனுசு, மீனம்.
புதன் - ரிஷபம், சிம்மம், துலாம்.
குரு - மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்.
சுக்கிரன் - மிதுனம், தனுசு, மகரம், கும்பம்.
சனி - ரிஷபம், மிதுனம்.
ராகு, கேது - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
ராசிகளோடு பகை நிலை பாராட்டும் கிரகங்கள்.
சூரியன் - ரிஷபம், மகரம், கும்பம்.
செவ்வாய் - மிதுனம், கன்னி.
புதன் - கடகம், விருச்சிகம்.
குரு - ரிஷபம், மிதுனம், துலாம்.
சுக்கிரன் - கடகம், சிம்மம், தனுசு.
சனி - கடகம், சிம்மம், விருச்சிகம்.
ராகு, கேது - கடகம், சிம்மம்.
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனப் படும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை லக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள்.
மேஷ லக்கினத்தில் ஒரு பெண் பிறந்து இருப்பாரேயாகில் அவருக்கு ஆண்களின் குணாதிசியங்கள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது முன் கோபமும் முரட்டுத்தன்மை உடையவராக இருப்பார் எனக் கொள்ளலாம். அதேபோல் ஒரு பெண்ரசியில் ஒரு ஆண் பிறந்து இருப்பரேயாகில் அவருக்குப் பெண்களின் குணாதிசயங்கள் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது பயந்த சுபாவம் உள்ளவராகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருப்பார் எனக் கொள்ளலாம். ஆண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசாபுக்தி காலங்களில் ஆண் சந்ததியையும், பெண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசா, புக்தி காலங்களில் பெண் சந்ததியையும் கொடுக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணாவென்று அறிய இந்த ராசிகள் பயன்படும். ஒருவர் ஜாதகத்தில் 5-ம் வீடு ஆண்ராசியாகி, 5-க்குடையவர் ஆண்கிரகமாக இருந்து அவரும் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சந்ததிகள் அதிகம் இருக்கும் என்று கூறலாம். 5-ம் வீடு பெண்ராசியாகி, 5-க்குடையவர் பெண் கிரகமாகி அவர் பெண் ராசியில் இருப்பாரேயகில் அவருக்கு பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம்.
வடக்கு, தெற்கு ராசி: மேஷம் முதல் கன்னிவரை வடக்கு ராசிகள், துலாத்திலிருந்து மீனம் வரை தெற்கு ராசிகள்.
நெருப்பு ராசி :மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசி எனப் படும். இந்த மூன்று ராசிகளை லக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். இந்த நெருப்பு ராசியில் உள்ள கிரகங்களும் மேற்கூறிய தன்மைகளைப் பெற்று இருக்கும். நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள் நெருப்பு சம்மந்தப்பட்ட தொழிலில் இருக்கவும் சாத்தியக் கூறுகள் உண்டு.
நிலராசி:ரிஷபம்,கன்னி, மகரம் ஆகிய மூன்றும் இந்த ராசியைச் சேர்ந்தவை. இந்த ராசியை லக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக் கூடியவர்கள். எதையும் யதார்த்தமாகவும், எச்சரிக்கையுடனும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சிக்கனமாகச் செலவழிக்கும் மனது இவர்களுக்கு உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத் தொந்தரவு உண்டு. ஜீவனஸ்தானமான 10-ம் இடம் நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான வேலைகள், விவசாயம் ஆகியவை மிகுந்த பலன் தரும்.
காற்று ராசி:நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப்பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் தொழிலுக்கு ஏற்றவர்கள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசியும் காற்று ராசிகளாகும்.
ஜலராசிகள்:கடகம், விருச்சிகம். மீனம் ஆகிய மூன்றும் ஜல ராசிகளாகும். இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் மிகுந்தவர்கள். இதை Fruitful Signs என்றும் சொல்லுவார்கள். ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப் பட்ட தொழில் கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகிய வற்றில் இருப்பார்கள். இந்த ராசிக்கரர்கள் கற்பனை வளம்மிக்கவர்கள்.
சூரியன்: சிங்கராசிக்கு அதிபதியாவார். சந்திரன்: கடகராசிக்கு அதிபதியாவார். செவ்வாய்: மேஷ-ராசிக்கும், விருட்சிக-ராசிக்கும் புதன்: மிதுன-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் குரு: மீன-ராசிக்கும், தன-ராசிக்கும் சுக்கிரன்: இடப-ரசிக்கும், துலாம்-ராசிக்கும் சனி: மகர-ராசிக்கும், கும்ப-ராசிக்கும் அதிபதியாவார்.
சர ராசி :மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளும் சரராசிகளெனப்படும். இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள். மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள். எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள். சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள். சரராசி 2-ம் வீடாக இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒரே சீராகப் பணவரவு இருக்காது. ஒரு சமயம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் குறைவாக இருக்கும். வியாபாரம் செய்யத் தகுந்தவர்கள் இவர்கள். வியாபாரத்தில்தானே வரவு ஒரே மாதிரியாக இருக்காது. 3-ம் வீடு சர ராசியாக இருந்தால் அவர்கள் வெளியூர்ப் பயணத்தை விருப்புவர். மூன்றாம் வீடு வெளியூர்ப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? இந்த ராசிக்காரர்கள் தான் நினைத்ததை முடிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள்.
ஸ்திர ராசி: மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள். நிரந்தரமான வரவு இவர்களுக்கு உண்டு. ஸ்திர ராசி 6-ம் வீடாக இருந்து ஒருவருக்கு வியாதி வருமேயானால் பரம்பரையான வியாதி வருவதற்கு வழியுண்டு. குணம் ஆகாத வியாதிகள் ஆஸ்த்மா, சர்க்கரை போன்றவியாதிகள் வரக்கூடும். 3-ம் இடம் ஸ்திர ராசியாக இருப்பின் வெளியூர் செல்வதை விரும்ப மாட்டார். ஸ்திர ராசியிலுள்ள தசா,புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலையில் நிரந்தரம் ஆகும். மிகவும் நிதானமாகச் செயல் படும் தன்மை கொண்டவர்கள் இவர்கள்.
உபய ராசி: உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள். சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றை வெறுப்பவர்கள். கஷ்டமான வேலையைக் கண்டு மலைப்பவர்கள். நரம்பு சம்மந்தமான வியாதிகள் இவர்களைத் தாக்கும். இவர்கள் உறுதியான எண்ணங்கள் இல்லாததால் அடிக்கடி தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டே இருப்பர்கள். இவர்கள் ஏஜென்சித் தொழிலுக்கு ஏற்றவர்கள்.
நன்மைபயக்கும் ராசிகள்: எல்லா ஜல ராசிகளும் இந்த வகையைச் சேர்ந்தன. ரிஷபம், துலாம், தனுசு, மகரம் ஆகியவை பாதி நன்மை பயக்கும் ராசிகள் என்று கூறுவார்கள். ஒருவருக்குக் குழந்தை இல்லை எனக்கொள்ளுங்கள். இவர் ஜாதகத்தில் 5-ம் வீடு Fruitful Sign ஆகி 5-க்குடையவன் மற்றொரு Fruitful Sign-ல் இருப்பாரேயாகில் அவருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு எனக் கொள்ளலாம். இந்த Fruitful Sign ஆனது அதில் உள்ள கிரகங்களையும் நன்மைபயக்கும் கிரகங்கள் ஆக்குகின்றன. அதே போன்று கணவர் மனைவியர் ஏதோ சந்தர்பத்தின் காரணமாகப் பிரிந்து இருக்கின்றனர் எனக் கொள்ளுங்கள். அவர்கள் எப்போது சேருவார்கள் என்ற கேள்வி எழும். அப்போது இந்த ராசியில் உள்ள கிரகங்கள் பலன் சொல்லப் பயன் படும். நீங்கள் ஆரூடத்திப் பற்றிக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். அதாவது ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன் படும் ஜாதகம். அதாவது அவர்கள் கேள்வி கேட்க்கும் நேரத்தை வைத்து ஜாதகம் கணித்துப் பலன் சொல்லுவார்கள். ஒருவர் நம்மிடம் வந்து "நான் தேர்வில் வெற்றி பெருவேனா?"- என்று கேட்கிறார். அவரிடம் ஜாதகம் இல்லை. நாம் அந்த நேரத்திற்கு ஜாதகம் கணித்துப் பார்க்கிறோம். தேர்வு, படிப்பு ஆகியவைகளை 4-ம் வீடு குறிக்கிறது. 4-ம் வீட்டில் சுபகிரகங்கள் இருந்து 4-ம் வீட்டிற்குடையவர் 11-ம் வீட்டில் அதுவும் 11-ம் வீடு Fruitful Sign ஆகவும் இருந்து விட்டால் நாம் எளிதாகச் சொல்லலாம். நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவீர்கள் என்று அடித்துச் சொல்லலாம். இவ்வாறு பலவழிகளில் இந்த Fruitful Signs - உதவி புரிகிறது. கடகம், விருச்சிகம், தனுசு ஆகியவை Fruitful signs எனப்படும்.
வறண்ட ரசிகள்: நம்மை பயக்கும் ராசிகளுக்கு எதிர் மறையான ராசிகள் இந்த வறண்ட ராசிகள் அல்லது Barren Signs. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகியவை வறண்ட ராசிகள் எனப்படும். இந்த ராசியிலுள்ள கிரகங்கள் நன்மை கொடுக்காது.
ஊமை ராசிகள்: எல்லா ஜல ராசிகளும், அதாவது கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை Mute Signs அல்லது ஊமை ராசிகள் எனப்படும். இதை சற்று விளக்கமாக எழுதுகின்றோம். ஒருவருக்கு ஜாதகத்தில் 2-ம் வீடு பேச்சு, நாக்கு வன்மையைக் குறிக்கிறது. 2-ம் வீடு ஊமை ராசியாக வந்து அதில் புதன் இருந்து சனியால் பார்க்கப் பட்டால் அவர் திக்கித், திக்கிப் பேசுவார். செவ்வாய் பார்த்தால் மிக வேகமாகப் பேசுவார். குழந்தைகள் நன்றகப் பேசுவார்களா அல்லது பேசமாட்டார்களா என்று 2-ம் வீட்டையும், இந்த ஊமை ராசிகளயும் வைத்துக் கொண்டு சொல்லிவிடலாம்.
முரட்டு ராசிகள் :மேஷமும், விருச்சிகமும் முரட்டு ராசிகள் எனப்படும். இவற்றிற்கு அதிபதி செவ்வாய் அல்லவா? செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் அல்லவா ? அதனால் அந்த ராசிகளுக்கு முரட்டு ராசிகள் எனப்படும்.
நான்கு கால் ராசிகள் :மேஷம், ரிஷபம், சிம்மம், மகரம் ஆகியவை நான்குகால் ராசிகள் எனப்படும். செம்மரிக் கடா (மேஷம்), காளை (ரிஷபம்), சிங்கம் (சிம்மம்), ஆடு (மகரம்), ஆகியவை 4-காலுள்ள உயிரினங்கள். ஒருவர் " நான் கார் வாங்க ஆசைப் படுகிறேன்? என்னால் வாங்க முடியுமா?" என்று கேட்டார். அவர் ஜாதகத்தை பார்த்தால் அவருக்கு அப்போது சனிதசை, சூரிய புக்தி நடந்து கொண்டிருந்தது. நம்முடைய கணக்குப்படி அந்த தசா புக்தியில் அவருக்கு வாகன யோகம் வந்து இருந்தால் அவர் கார் வாங்குவாரா அல்லது மோட்டார் சைக்கிள் வாங்குவாரா என்று எப்படிச் சொல்வது? புக்தி நாதன் சூரியன் அவருக்கு மகரத்தில் இருந்தார். மகரம் நாலுகால் ராசியல்லவா? ஆகவே சூரியன் நாலுகால் ராசியின் பலனைக் கொடுப்பார் என்று நீங்கள் கார் வாங்குவீர்கள் என்று கூறலாம்.
இரட்டை ராசிகள் (Dual Signs):மிதுனம், தனுசு, மீனம் ஆகியவை இரட்டை ராசிகள் எனப்படும். இந்த ராசிகளின் உபயோகம் என்ன? ஒருவருக்கு இரண்டு மனைவிகளா? குழந்தை இரட்டையாகப் பிறக்குமா? இரட்டை வருமானம் ஒருவருக்கு வருமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த ராசியை வைத்துக் கொண்டு பதில் சொல்லலாம். புதனுக்கு இரட்டைக் கிரகம் என்ற பெயர் உண்டு. அவர் ஒருவரின் ஜீவனஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது அதில் இருந்தாலோ அவருக்கு இரட்டை வருமானம் வரும் எனக் கூறலாம். சிலர் அரசாங்கத்தில் வேலை செய்வார்கள். அதைத்தவிர மேஜைக்கு அடியிலும் வாங்குவார்கள். இதுவும் இரட்டை வருமானம்தான். இந்த மாதிரி மேஜைக்கு அடியில் வாங்குபவர்களுக்கு 10-ம் வீட்டில் புதனுடன் சனியும் சேர்ந்து இருக்கும். அல்லது சனியின் பார்வையாவது இருக்கும். சனி எதையும் ரகசியமாகச் செய்யக் கூடியவர்.
அருமை. தெளிவான விளக்கங்கள்.
ReplyDeleteVery not
ReplyDeleteஅருமை பொய்கை
ReplyDeleteReally superb sir, your collection is excellent. Wish you all success.
ReplyDelete